மனித நேயம்...


அவனுக்கு அந்தப் பேருந்துப்பயணம் வெறுப்பையும், சலிப்பையுமே தந்திருக்க வேண்டும். பேருந்தில் பயணித்து, பயணித்து அவனுக்கு வாழ்வே வெறுத்துப் போயிருந்தது. பேருந்து இரைச்சலோடு தொலைக்காட்சியின் அலறல் வேறு. இப்பொழுதெல்லாம் நம்மவர்களுக்கு வண்ணத்திரைப் பேருந்து தான் மிகவும் பிடித்தது. ஆனால் அவன் மதுரைக்கு வந்து இறங்கியதும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற உணர்வை பெற்றிருந்தான்.
அவன் கோவையிலுள்ள அனாதை மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் ஊர் ஊராகச் சென்று " குழந்தைகள் நலநிதி " திரட்டுகின்ற பணி. அதற்காகவே அவன் இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறான்.
அவன் பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு மதுரை மாநகர் என்பதற்கு அடையாளமாக மக்கள் கூட்டமும், " கொய்யா! அம்மா! " என்றும் வெள்ளரி, திராட்சை என வியாபாரிகளின் குரல் ஒரு பக்கமும் அவனுக்கு தென்பட்டன.
இடிக்குப் பயந்து மரத்தில் ஒதுங்கிய கதையாக, பேருந்திலிருந்து தப்பித்தவன், மதுரை மாநகரின் வெயிலுக்கு தப்பிக்க இயலவில்லை. வெயில் தனது கொடூரத்தை மக்களுக்கு காட்டிக் கொண்டிருந்தது.
இருந்தாலும், வந்த வேலையை அவன் தொடங்க நினைத்தான். தனது கைப்பையிலிருந்து உண்டியலையும், துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தான். ஏதோ, போட வேண்டும் என்பதற்காக உண்டியலில் சில்லறைகளைப் போட்டவர்களே ஏராளம். இறக்கத்தோடு போட்டதாக ஒருவரும் தென்படவில்லை.
ஒரு சிலர், நின்று கூட துண்டு பிரசுரங்களை வாங்காமல் நடந்து கொண்டிருந்தனர். அவன் தன் வேலையை நன்றாகத் தான் செய்தான். அவன் நிதி திரட்டிய விதத்தை கண்டால், இந்தியாவின் கடனைப் போக்க உலக நாடுகளிடம் இப்படி நிதி திரட்டினால் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணத் தோன்றும்.
உண்டியலுக்கு இன்று நல்ல வேட்டை உண்டியல் குலுக்கியே இந்த நாட்டை உண்டு இல்லை என்று தீர்த்தார்கள் என்பது உண்மைதான் போலும்.
இந்நிலையில், வெயிலின் கொடூரத்தை அவனால் தாங்க இயலவில்லை. ஏதாவது "ஜில்" என்று குடித்தால் தான் நிற்க முடியும் போல இருந்தது அவனுக்கு.
அவனுடைய நாவின் சுரண்டலுக்கு உண்டியலைச் சுரண்டலாம் என எண்ணினான். உண்டியலில் பணத்தை எடுத்தால் யாருக்கு தெரியப் போகிறது?
உண்டியலில் இருந்து கொஞ்சம் சில்லறைகளை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஒரு "பழச்சாறுக்" கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது, கைகளில் யாரோ சுரண்டுவது போல ஓர் எண்ணம்.
திரும்பிப் பார்த்தான் அவன். பரட்டைத் தலையுடனும், கிழிந்த ஆடையுடனும் ஒரு சிறுமி "அண்ணே! பசிக்குது ஒரு ரூபாய் இருந்தா தாங்க!" என்று அழுகையுடன் கலந்த குரலில் கேட்டாள்.
"இல்லை, இல்லை போ. பஸ் ஸ்டாண்ல நிம்மதியாக நிக்க முடியல அதுக் குல்ல இதுக தொல்லை" என்றான் அவன்.
" இது குழந்தைகளுக்கு திரட்டிய நிதியா? இல்லை இவன் குளிர்பானம் குடிக்க திரட்டிய நிதியா?" தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டது உண்டியல்.
அவன் அந்த சிறுமியை தூரத் தள்ளி விட்டு உண்டியலை பைக்குள் வைத்துவிட்டு பேருந்தில் ஏறி கோவைக்கு பயணமானான். பேருந்து மதுரையை விட்டுச் சென்றது.
பிறகு, சென்னை, சேலம், திருச்சி என பல ஊர்களில் வசூல் செய்து விட்டு மீண்டும் ஒரு மாதம் கழித்து அவன் மதுரைக்கு வந்தான்.
மதுரைக்கு வந்தால் அவனது மனதிற்கு ஏதோ, ஒருவித ஆறுதல். அதற்கு காரணம் இப்படியும் கூட இருக்கலாம். மதுரைக்கு வந்தால் நிதி வசூல் கொஞ்சம். அதிகமாக கிடைக்கும். தமிழ் வளர்த்த மதுரையில் மக்கள் தமிழை மறந்து விட்டாலும், தமிழர் பண்பாடான அறத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் போல.
எப்படியோ அவன் இன்றும் வசூலை முடித்து விட்டு புறப்படலாம் என்று எண்ணினான் இன்றும் தாகம், அவன் நடக்க இயலவில்லை. இன்றும் உண்டியலில்லிருந்து சில்லறையை எடுத்துக் கொண்டு குளிர்பானக் கடைக்குப் போனான்.
அந்த சிறுமி இன்றும் கையில் குழந்தையுடன் அவன் எதிரே ஓடி வந்தாள்.
"அண்ணே! எனக்காக இல்லாட்டினாக் கூட பரவாயில்லை. இந்த பாப்பா பசியால அழுகிறது இதற்காகவாவது கொடுங்க" என்றாள்.
"அன்னைக்கும் வந்து தொல்லை கொடுத்த இன்னைக்கு இந்த குழந்தையோடவா? என்ன நீங்க எல்லாம் ஒரு கூட்டமா திரியிறீங்களா?" என்றான்.
"இல்லை, அண்ணே" என்ற மறுதலித்தாள்.
"பிறகு யாரு இது?" என்றான் அவன்.
" ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்த பஸ்டாண்ல ஒரு ஆக்சிடன்ட் (விபத்து) நடந்தது அதுல எல்லாரும் செத்து போனாங்க அதுல தப்பிச்சுகிட்டது இந்த பாப்பா மட்டுந்தான். யாரும் இவளை தூக்கல; நான் தான் இவளை தூக்கி நான் பிச்சை எடுக்கிற காசுல இவளுக்கு சாப்பாடு கொடுக்கிறேன்" என்றாள்.
அவனுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது. உண்டியலிலிருந்து கொஞ்சம் காசை அவளுக்கு எடுத்து தந்துவிட்டு புறப்பட்டான்.
இன்னும் கூட "மனிதநேயம்" மக்களிடம் பிச்சைகேட்டு கொண்டு தான் இருக்கிறது. பணத்திடம் மனம் இருப்பதில்லை; மனிதத்திற்கு மதிப்பு இருப்பது இல்லை. (மனித நேயம், மனித நேயம் என்று பல முறையும் மக்களிடம் சொல்லியும் மறந்து போன கதை இது.)

Post a Comment

0 Comments