தவறு எங்கே நடந்தது?

ணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடாலென்று கீழே வண்டியோடு சாய்ந்தாள்.

எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது மூப்பில் தளர்ந்த உடலால் இதெல்லாம் சாத்தியமா? நல்லவேளை தெருவில் போன யாரோ வண்டியையும் அவளையும் தூக்கி விட்டனர். கைத்தாங்கலாய் கமலாம்பாள் உள்ளே அழைத்துச் சென்றாள். முகத்தை துடைத்துவிட்டு தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினாள் சீதா சற்று தெளிவானாள். நல்லவேளை தோளில் தொங்கிய ஹாண்ட்பேக் டேபிள்மேல் வைக்கப்பட்டிருந்தது. எடுத்து செல்லை உசுப்பி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி ஒருமணி நேரம் பர்மிஷன் கேட்டாள்.
பேசி முடித்ததும் கமலாம்பாள் காப்பியை நீட்டினாள் நிமிர்ந்து வாங்கிய போது சுவரில் தெரிந்த போட்டோ அவளை அதிர வைத்தது.
"இது யாரும்மா?" கீதா கேட்டாள்.
"இது எம் பையன் விஷ்ணு. அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்லே வேலை பாத்துண்டிருந்தான். என்ன பொல்லாத காலமோ கம்பெனில கட்டச் சொல்லிக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய பேங்க்ல கட்டினானாம்.. ஆனா அவா கம்பெனிக் கணக்குலே வரவு வர்லேன்னு சஸ்பெண்ட் பண்ணீட்டா. ஒரு வாரமாச்சு பாவம் பைத்தியமா அலையறான்."
"விஷ்ணுவை எனக்கு நல்லாத்தெரியும் அப்படிபட்ட ஆளு இல்லை. எங்கயோ தவறு நடந்திருக்கு. அவர் பணம் கட்டினது எங்க பேங்க்லதான்.. இவ்வளவு சீரியஸாகும்ணு நினைக்கலை நீங்க கவலைப்படாதீங்க. உடனே இந்தப் பிரச்சினையைக் கவனிக்கறேன்."
"எப்படியோ தாயி அந்தக் கடவுள்தான் உன்னை அனுப்பிச்சிருக்கார். நிச்சயம் ஒரு வழி பொறக்கும்."
கீதா கிளம்பினாள்.
பேங்க் மும்முரத்திலிருந்தது. கீதா தன் சீட்டில் அமர்ந்தவுடன் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்க்கு போன் செய்தாள். கம்பெனி முதலாளிதான் பேசினார்.
பணம் காணாமல் போன தேதியும் தொகையும் கணக்கு எண்ணையும் கேட்டுக் குறித்துக் கொணடாள்.
அடுத்து அதே தொகை, அதே தேதியில் வேறு யாருக்காவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கம்ப்யூட்டரின் பற்களை பதம் பார்த்தாள்.
அடுத்தசில நிமிடங்களில் அது உண்மையைக் கக்கி விட்டது. அம்பாள் இஞ்சினீரிங்ஸ் என்ற கம்பெனிக்கு அதே தொகை அதே தேதியில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனியை அழைத்துக் கேட்டதில் அவர்கள் அந்த தேதியில் வேறு தொகைதான் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். விஷயம் இதுதான் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண் 1300023 ஆனால் அம்பாள் இஞ்சினியரிங்ஸ் கணக்கு எண் 1300032. பிங்கரிங் மிஸ்டேக். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து ட்ரன்ஸ்பர் என்டரி போடச் சொல்லி உத்திரவிட்டாள். பணம் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மீண்டும் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியை அழைத்தாள்.
"சார் உங்க கணக்கில பணம் வரவு வச்சாச்சு. பாவம் சார் விஷ்ணு நல்ல மனுசன் இதில அவரோட தப்பு எதுவுமில்லே ரொம்ப புவர்பேமலி அவர் அம்மாவப் பார்த்தேன். முகத்தில மூக்குத்தி தவிர வேற எதுவுமில்ல இவுங்களா திருடியிருப்பாங்க."
"சாரிம்மா இவ்வளவுதூரம் நீங்களே சொல்லும் போது நா மறுப்பேனா இதோ இப்பவே சஸ்பென்சன் ஆர்டரை கேன்சல் பண்றேன்." என்றார் அவர்.
அடுத்த அரைமணிக்குப் பின் விஷ்ணு நன்றி சொல்ல கீதாவின் அறைக்கு வெளியே காத்திருந்தார்.

Post a Comment

0 Comments