ஓசை எழுப்பாமல்தான் உள்ளே நுழைய நினைத்தான். பாமரேனியன் இருட்டில் அவனை அடையாளம் தெரியாமல் வள்ளென்று குரைத்து விட்டது.
லைட் வெளிச்சம்.
வெப்பமாக அவனைப் பார்த்த பின் - உள்ளே மறைந்தார் அப்பா. இப்போதெல்லாம் அவர் எதுவும் கேட்பதில்லை. மவுனமாய் உமிழும் அந்த வெறுப்பான பார்வைக்கு பதில் முன்பைப் போல் கத்தி விடலாம்.
இருளின்
இட்டு நிரப்பாத
இடைவெளிகளில்
எல்லையற்று நீளும்
வெள்ளை நிழல்களின்
மவுன சப்தங்களை
மொழிபெயர்த்த பின்புதான்

பின்புதான்... பின்புதான்...
சமயத்தில் அவனுக்குள் புரண்டு வரும் கவிதை அந்தப் பார்வையில் அப்படியே பொசுங்கிப் போய் விடும். சத்தம் கேட்டு - கூந்தலை முடிச்சுப் போட்டபடியே லேகா வநதாள். " அண்ணா, வந்து சாப்பிட்டுப் போய்ப் படு. "
மணி பதினொன்றாகப் போகிறது. அவள் மட்டும் தூங்க மாட்டாள். அவன் சாப்பிடாமல் அவளுக்குத் தூக்கம் வராது. இந்த வீட்டில் அவனைப் புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அவள் மட்டுமே.
தினமும் அவன் முன்னால் ஐந்து நிமிஷமாவது உட்கார்ந்து, " அண்ணா, இன்னிக்கு நீ எழுதின கவிதையைச் சொல்லு. "
விழிகள் விரிய ஆர்வமாய் அவன் சொல்லும் கவிதையைக் கவனிப்பாள். " இந்த இடத்தில் அழகை-ங்கிற வார்த்தைக்குப் பதிலா எழிலை-ன்னு போட்டா இன்னும் நல்லாருக்குமோ? " நச்சென்று சில சமயம் திருத்தங்கள் சொல்வாள்.
காதல் கவிதைகளை அவன் வாசிக்கும்போது - அவள் கன்னத்து மேடுகள் பிங்க் சாயம் தீற்றிக் கொள்ளும். அதை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டே - " படவா அண்ணா, இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு வர்ணிக்கறியே. யார் அவ? " என்பாள். " ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நீ மிகப் பெரிய கவிப் பேரரசு ஆகத்தான் போறேண்ணா. " என்று சத்தியம் செய்வாள்.
அவனிடம் ஏதாவது லேசான மாறுதல் என்றாலும் அதைக் கவனிக்கும் முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். யோசனையோடு சாதத்தில் கைகளை அளைந்து கொண்டிருக்கும் அவனிடம் என்னவோ பிரச்சனை என்பதை உணர்ந்து கொள்ள அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.
இருந்தாலும் நேரடியாக, " என்ன பிரச்சனை அண்ணா? " என்று கேட்டு விட மாட்டாள். அவனிடம் எதைக் கேட்டால் தானாகவே விஷயம் வரும் என்று அவளுக்குத் தெரியும்.
" அண்ணா, உன்னோட கவிதை நோட்டு எங்கே? புதுசா ஏதாச்சும் எழுதியிருப்பியோன்னு காலைல இருந்து அதைத் தேடிட்டிருக்கேன். "
இந்த மாதிரி ஒரு கேள்விக்காகக் காத்திருந்தது போல உஷ்ணமாய்ப் பீறிட்டான். " கவிதையாவது, மண்ணாவது. இனிமே நான் எழுதப் போறதில்லை. எனக்குள்ள இருந்த சொப்பனாதித்யன்ங்கற கவிஞன் இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணி நாற்பது நிமிஷத்தோட செத்துட்டான். "